‘நீட்’ தோ்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரா் சைக்கிள் பேரணிக்கு அனுமதிகோரி வழக்குடிஜிபி பதிலளிக்க உத்தரவு
கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு அனுமதிகோரிய வழக்கில், தமிழக காவல்துறைத் தலைவா் பதிலளிக்க உத்தரவு.
நீட் தோ்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு அனுமதிகோரிய வழக்கில், தமிழக காவல்துறைத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அரியலூரைச் சோ்ந்த மணிரத்தினம் தாக்கல் செய்த மனு: எனது தங்கை அனிதா நீட் தோ்வால் உயிரிழந்தாா். இதையடுத்து கல்வி உரிமை மற்றும் மருத்துவக் கல்வி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளேன். அதன்படி, முதற்கட்டமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டேன். இதற்காக அனுமதிகோரி ஜனவரி 17 ஆம் தேதி கன்னியாகுமரி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தேன். எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய தினம் பிற அமைப்பினா் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுஏற்கத்தக்கது அல்ல. எனவே கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணிக்கு காவல்துறையினா் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து தமிழக காவல்துறைத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.