FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

அல்ட்ரா மார்டன் கல்வி வளாகத்தில் டூரிங் டாக்கீஸ்!

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியருக்கு பழைமையான 'டூரிங் டாக்கீஸ்'

Updated On : 1 மார்ச் 2026, 4:12 pm IST
பகிர்:

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியருக்கு பழைமையான 'டூரிங் டாக்கீஸ்', அதாவது 'டென்ட் கொட்டாய்' திரை அனுபவத்தை மீண்டும் ஏற்படுத்திக் காட்டும் வகையில், 'வி.ஐ.டி. டாக்கீஸ்' எனும் சிறப்புத் திரையிடல் பிப். 18 முதல் 21-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடத்தப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்கள் திரைப்படங்களை எவ்வாறு பார்த்து ரசித்தார்களோ, அதேபோன்ற திரையரங்கு அனுபவம் இன்றைய புதிய தலைமுறை மாணவர்களுக்காக உயிர்ப்பிக்கப்பட்டது.

இங்கே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தனர். திரையரங்கு ஊழியர்களாக மாணவர்களே பணியாற்றி அசத்தினர். படப்பெட்டியை குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலம், அதற்கு பூஜை, ஆண்- பெண் வரிசை முறையில் நுழைவுச் சீட்டு விநியோகம், வண்ணக் காகித அலங்காரம், கூம்பு வடிவ மைக் செட் உள்ளிட்டவை நினைவுகளை மீட்டெடுத்த மறக்க முடியாத திரையரங்கு அனுபவம். இந்த நிகழ்வை, நம் மாணவர்கள், பல மொழிகள் பேசும் பிற மாநில மாணவர்கள் மட்டுமின்றி, சர்வதேச மாணவர்களும் ரசித்தனர்.

'கிராமங்களிலேயே இன்று டென்ட் கொட்டாய் திரையரங்குகள் இல்லாத நிலையில், மாநகரில் இதை எவ்வாறு வடிவமைத்தீர்கள்' என்பது குறித்து வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்திடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'கரோனா காலத்துக்குப் பின்னர், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நாம் பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கிறோம். உணவுப் பழக்கம், நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். முன்பெல்லாம் சைக்கிள் வாங்கித் தந்தால் ரசித்தோம். இப்போது கார் வாங்கிக் கொடுத்தாலும், பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவதில்லை. பல லட்சம் ஊதியம் வாங்கினாலும், இளைய தலைமுறையினர் நிம்மதி கொள்ளாமல் பணி மாறுகின்றனர். யாரும் மனத் திருப்தி அடைவதில்லை.

வரிசை முறை மறைந்துபோய், இணையவழியில் பெறும் பழக்கம் உருவாகிவிட்டது.

அவ்வப்போது வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் வழிகாட்டுதலில் பொங்கல் விழாக்கள், கலாசார விழாக்களில் பழைய நினைவுகளைக் கூறும் வகையில் பல்வேறு விஷயங்களை மாணவ, மாணவியர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் நல்ல கருத்துகளை எடுத்துரைத்தது, இளையராஜாவின் இசைப்பாடல்கள், 'டூரீங் டாக்கீஸ்' -'டென்ட் கொட்டாய்' போன்றவற்றை இளைய தலைமுறையினர் அறிவதில்லை.

விசில் சப்தத்தில் ஆரவாரத்தோடு படம் பார்த்த நிலை மாறி, அமைதியாகச் சொகுசு நாற்காலிகளில் திரைப்படம் பார்ப்பதுதான் இப்போது நடைபெறுகிறது. இதற்காக அந்தக் காலத் திரைப்பட அனுபவத்தை உயிர்ப்பிக்க முடிவு செய்தோம். சில நாள்களில் தயாராகவில்லை. பல வாரங்கள் பிடித்தன. வி.ஐ.டி. வளாகத்தில் தகர ஷெட்டுகளை அமைத்தோம். ஓலையையும் சுற்றிலும் துணியையும் கட்டினோம். குண்டு பல்புகள், திரைச்சீலைகளைப் பொருத்தினோம். ஆண், பெண்கள் என இரு வரிசைப்படி டிக்கெட் கவுன்ட்டர்கள், ஸ்நாக்ஸ் கவுன்ட்டர்கள், போஸ்டர்கள் என ஒவ்வொன்றாக வடிவமைத்தோம். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மணல் தரையில் தரை டிக்கெட் என்று திரையரங்கில் மூன்று வரிசை முறைப்படி உருவாக்கினோம். செங்கல்பட்டில் இருந்து திரைப்படங்களுக்கான பெட்டிகளைப் பெற்றோம்.

பிப். 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் நான்கு நாள்கள் எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' , ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' , 'சந்திரமுகி'யின் மலையாள மொழிமாற்றப் படம், கமலஹாசன் நடித்த 'நாயகன்', சரித்திரப் படமான 'பாகுபலி', ஹிந்தி படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' ஆகியவை திரையிடப்பட்டன.

1965-ஆம் ஆண்டிலேயே கடற்கொள்ளையர்கள் குறித்து எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை மாணவர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

தொடக்க நாளில் இரு காட்சிகளாகத் தொடங்கினோம். மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த நாள்களில் மூன்று காட்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு காட்சிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் திரைப்படங்களைப் பார்க்க வருகை தர, 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர். வி.ஐ.டி. ஊழியர்களுக்காகவும் தனிக் காட்சியைத் திரையிட்டோம்.

படப் பெட்டிக்கு வரவேற்பு அளிப்பது, பூஜைகள் நடத்துவது, ஆண்- பெண் என இரு வரிசைகளில் நுழைவுச் சீட்டுகளை வாங்கி அரங்கில் சென்று அமர்ந்தது, சுடச்சுட நொறுக்குத் தீனிகள் போன்றவை மாணவர்களைக் கவர்ந்தன. 'புட் பேக்கிங்' முறையில் சாப்பிட்ட மாணவர்களுக்கு சுடச்சுட சமோசா, பாப் கார்ன், கோலி சோடா போன்றவை நல்ல அனுபவத்தை ஏற்படுத்தின.

திரையரங்கத்தில் நடிகர்களின் சுவரொட்டிகள் ஒட்டியதும், 'ஆண் பாவம்' படத்தில் வரும் திரையரங்கம் தொடர்புடைய பாடல்களைத் திரையிட்டதும் மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.

அந்தக் காலத்தில் டென்ட் கொட்டாயில் தரை டிக்கெட்டில் மணலைக் குவித்து அமர்ந்து ரசித்தோம். ஆனால், மாணவர்களோ தரையில் மணல் மீது அமர்ந்தபடி திரைப்படங்களைப் பார்க்க சிரமப்படுகின்றனர். அமைதியான முறையில் ரசிக்கும் 'டிரைவ் இன் தியேட்டர்கள்', 'ஏ.சி. தியேட்டர்கள்' என அமைதியான சூழலில் படம் பார்த்திருந்த மாணவர்களுக்கு இது புதுமையான அனுபவமாக இருந்தது.

மாணவர்களுக்கு இந்தத் திரைப்பட அனுபவம் உணர்ச்சிபூர்வமாக இருந்தது' என்கிறார் ஜி.வி.செல்வம்.

எதுவொன்றும் இருக்கும்போது யாரும் அதன் அருமை பற்றி அறிவதில்லை. கவலைப்படுவதும் இல்லை. காலம் கடந்த பிறகு திரும்பிப் பார்க்கும்போது, இந்த 'டென்ட் கொட்டாய்' போன்ற ஏராளமான விஷயங்கள் மக்களை உயிர்ப்பிக்கக் காத்திருக்கின்றன. 'அல்ட்ரா மார்டன்' கல்வி வளாகத்தில் அபூர்வமான புதிய முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments