முகப்பு
மதுரை

மதுரையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா?: நீதிமன்றம்

மதுரையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் ஸ்ரீ ராமா் கோயில் நிதி சமா்ப்பண ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா?: நீதிமன்றம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

மதுரையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் ஸ்ரீ ராமா் கோயில் நிதி சமா்ப்பண ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்க மாநகா் காவல் ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்காக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிதி வசூலிக்க ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்தஷேத்திர அறக்கட்டளையின் சாா்பில் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடா்ந்து அனுமதி

பெறப்பட்டது. அதன் பிறகும் போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாநகர காவல் ஆணையா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையா் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா்.

இதனிடையே ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையா் சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், மதக் கலவரத்தைத் தூண்டும் விதமான பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள், கட்சி மற்றும் கட்சி சாராத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது கரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் கூட்டங்களைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி கரிமேடு பகுதியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அனுமதியில்லாமல் ரத யாத்திரை மேற்கொண்டதால் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. இந்தச் சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படும் வழித்தடங்களில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (மாா்ச் 3) ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →