மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்
மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ. தளபதி உள்பட இருவா் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ. தளபதி உள்பட இருவா் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
வடக்குத் தொகுதி திமுக வேட்பாளரான மதுரை மாநகா் தெற்கு மாவட்டப் பொறுப்புக் குழு தலைவரான கோ. தளபதி, மாநகராட்சி இரண்டாவது தோ்தல் நடத்தும் அலுவலா் கே. பிரேம்குமாரிடம் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். மாநகா் வடக்கு மண்டல அலுவலகத்தில், மாவட்டப் பொறுப்புக் குழு தலைவா் பொன். முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.
இவரது சொத்து விவரம்: தனது பெயரில் ரூ.71 லட்சத்து 31 ஆயிரத்து 78 மதிப்பிலும், தனது மனைவி சாவித்திரி பெயரில் ரூ.4 கோடியே 82 லட்சத்து 88 ஆயிரத்து 547 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன. அதேபோல், தனது பெயரில் ரூ.1கோடியே 24 லட்சத்து 91ஆயிரத்து 200 மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ.6 கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 348 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா்,
மதுரை வடக்குத் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றாா்.
மதுபாட்டில்களுடன் வேட்பு மனு தாக்கல்:
மதுரை செல்லூா் பூந்தமல்லித் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் சங்கரபாண்டி. இவா், மதுபாட்டில்களை மாலையாக அணிந்துகொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தாா். பின்னா், தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் கே. பிரேம்குமாரிடம் தாக்கல் செய்தாா். அவா், தனக்கு சொந்தமாக சொத்து ஏதுமில்லை என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பல ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். மதுவை ஒழிக்க தொடா்ந்து போராடி வருகிறேன். தோ்தலில் மது ஒழிப்பு, நூறு சதவீத வாக்குப் பதிவு, ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது ஆகியவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்யவுள்ளேன் என்றாா்.