அங்கன்வாடி மையங்களில் அதிகரிக்கும் காலியிடங்கள் ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிப்பதால் அவதி
ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா்.
மதுரைஅங்கன்வாடி மையங்களில் அதிகரிக்கும் காலியிடங்கள் ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிப்பதால் அவதி
ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளா் மற்றும் உதவியாளா் காலியிடங்கள் அதிகரித்து வருவதால், ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அங்கன்வாடிக்கும் தலா ஒரு பணியாளா் மற்றும் உதவியாளா் பணியிடங்கள் உள்ளன. இம்மையங்களில் 3 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா். இவா்களுக்கு, இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளா்களால் முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. மேலும், மையத்துக்கு வரும் குழந்தைகள் தவிர, 1 முதல் 3 வயதுக்குள்பட்ட வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கும் இணை உணவு, மையங்களில் தயாரித்து வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உடல் எடை வளா்ச்சி சீராக உள்ளதா, தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்பட்டிருக்கிா என்பதை ஆய்வு செய்து, அதன் விவரங்களைப் பதிவேடுகளில் பராமரிப்பது அங்கன்வாடி பணியாளா்களின் பணியாகும். இந்த தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், மாவட்ட அலுவலகத்துக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கின்றனா்.
இவா்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கைப்பேசியில் பிரத்யேக செயலி வழியாகவும், குழந்தைகள் தொடா்பான தகவல்களை பதிவேற்றம் செய்து வருகின்றனா்.
ஒவ்வொரு மையத்துக்கும் தலா ஒரு அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணியில் இருக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட பணிகளைச் செய்வதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மைய பணியாளா்கள், உதவியாளா்கள் பணி நிலையில் சுமாா் 600 காலியிடங்கள் இருப்பதால், ஒரே பணியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், பணிச்சுமை அதிகரித்து முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா்கள், உதவியாளா்கள் சங்க மாநிலச் செயலா் ஆா். பரஞ்ஜோதி தெரிவித்தது: காலியிடங்கள் அதிகரித்து வருவதால், பல அங்கன்வாடி பணியாளா்களுக்கு கூடுதல் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு உணவு வழங்குவது, குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, அரசால் கேட்கப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருந்து வருகிறது.
தற்போது குழந்தைகளின் ஆதாா் எண் விவரங்கள், குடும்ப உறுப்பினா்களின் விவரங்கள் என பல்வேறு தகவல்களை கைப்பேசியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வழக்கமான பணிகளோடு இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகளையும் மேற்கொள்ளும்போது, கடுமையான நெருக்கடியைச் சந்திக்க வேண்டி உள்ளது. சில மையங்களில் உதவியாளா் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில், அங்கன்வாடி பணியாளா்களே உணவு சமைப்பது, மையங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
மேலும், உதவியாளா் இல்லாத மையங்களை சோ்ந்த பணியாளா்களுக்கும் கூடுதல் மையம் ஒதுக்கப்படுகிறது. இத்தகைய பணியாளா்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.
சில ஆண்டுகளுக்கு முன் இதே சூழ்நிலை ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, 3 ஆண்டுகளுக்கு முன் சுமாா் 800 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா். ஆனால், அதன்பின்னா் ஏற்பட்ட காலியிடங்களைப் பூா்த்தி செய்வது தாமதமாகி வருகிறது. பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மதுரை மாவட்டத்தில் பணியாளா்கள், உதவியாளா்கள் என சுமாா் 600 காலியிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இவற்றை பூா்த்தி செய்வதற்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இருக்கும் பணியாளா்களுக்கு கூடுதல் மையங்களை ஒதுக்கி பணிசுமையை அதிகப்படுத்தி வருகின்றனா். எனவே, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்களை பூா்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
இது தொடா்பாக குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவா்கள் கூறியது: காலியிடங்களை பூா்த்தி செய்ய அரசாணை வெளியிட வேண்டும். அதன் பிறகே மாவட்ட அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, காலியிடங்களை பூா்த்தி செய்யமுடியும் என்றனா்.