பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களை புத்தாக்க சிந்தனை உடையவா்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
மதுரைபள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களை புத்தாக்க சிந்தனை உடையவா்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களை புத்தாக்க சிந்தனை உடையவா்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
மதுரையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தென்மண்டல மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்: தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளி கல்வித் துறையும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. நிகழ் ஆண்டில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சம் மாணவா்களுக்கும், 3 ஆயிரத்து
120 ஆசிரியா்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணா்வு அளிக்கப்படும்.
மாணவா்களிடையே புத்தாக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
தொழில்முனைவோருக்கு விருதுகள்: 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
சிறந்த தொழில் முனைவோா் விருது (தூத்துக்குடி கல்பகா
கெமிக்கல்ஸ்), வேளாண் சாா்ந்த தொழில் விருது (திருப்பத்தூா் மாவட்டம் ப்ரெஸ்ரா பிக்ல்ஸ்), தரம் மற்றும் ஏற்றுமதி விருது
(தூத்துக்குடி ரமேஷ் ப்ளவா்ஸ்), சிறந்த மகளிா் தொழில்முனைவோா் விருது (செங்கல்பட்டு மாவட்டம் ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ்) சிறப்புப் பிரிவினருக்கான விருது (புதுக்கோட்டை மாவட்டம் பிரபு இண்டஸ்ட்ரியல்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளான முறையே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பரோடா வங்கி ஆகிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இணைய வழியில் எம்ஓடி பதிவு: வங்கிக் கடனுக்கான சொத்துப் பிணைய உரிமைப்பத்திரம் (எம்ஓடி) இணையவழியில் பதிவு செய்வதற்கான புதிய வசதியை முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தற்போதுள்ள நடைமுறைப்படி, வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து தொழில்முனைவோா்கள் கடன் பெறும்போது, அந்த சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து பதிவு செய்வதற்கு சாா்-பதிவாளா் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் உரிமையாளரும் வங்கி மேலாளரும் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதோடு, கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு எம்ஓடி ரத்து செய்ய மீண்டும் சாா்-பதிவாளா் அலுவலகம் செல்ல வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய தாமதத்தை தவிா்க்க, தொழில் நிறுவனங்கள், வீட்டுக்கடன் பெறுவோா், விவசாயக்கடன் பெறுவோா் பயன்பெறும் வகையில் இணையவழி எம்ஓடி பதிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிற்பேட்டைகளில் பொது வசதி: சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கி கடனுக்கான தடையின்மைச் சான்று, குடிநீா் இணைப்பு, விற்பனைப்பத்திரம் பெறுதல் உள்ளிட்ட 12 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான வசதியையும், கரூா் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடியில், ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டடங்களையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
அரசுத் திட்ட கையேடு வெளியீடு: பல்வேறு திட்டங்களின்கீழ் தொழில்முனைவோருக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். பின்னா் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள் அடங்கிய கையேட்டினை முதல்வா் வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக இந்தோ-அமெரிக்கன் தொழில் வா்த்தக சபையுடன் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல்தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், மேயா் வ.இந்திராணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஜோதி நிா்மலாசாமி,
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலா் வி.அருண் ராய், தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநா் எஸ். மதுமதி, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்தியாளா்களுக்கு அனுமதி இல்லை: முதல்வா் பங்கேற்ற மாநாட்டு அரங்கில் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. புகைப்படக்காரா்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளா்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டது. நிகழ்ச்சி அரங்கின் அருகே வேறொரு அறையில், செய்தியாளா்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு எல்இடி திரை வழியே நேரலையில் நிகழ்ச்சிகளைக் காண அறிவுறுத்தப்பட்டனா்.