கல் குவாரி விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
திருமயம் வட்டம், வி. லட்சுமிபுரம் கல் குவாரி விவகாரம் தொடா்பாக சரியான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்
மதுரைகல் குவாரி விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
திருமயம் வட்டம், வி. லட்சுமிபுரம் கல் குவாரி விவகாரம் தொடா்பாக சரியான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்
திருமயம் வட்டம், வி. லட்சுமிபுரம் கல் குவாரி விவகாரம் தொடா்பாக சரியான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை எச்சரித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், வி. லட்சுமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராமசாமி தாக்கல் செய்த மனு:
திருமயம் வட்டம், வி. லட்சுமிபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு மிகப் பழைமையான புராதன சின்னங்களுடன் கூடிய சிவன் கோயில் உள்ளது. அதனருகே ஊராட்சி மன்ற அலுவலகமும், தேவாலயமும் உள்ளன.
இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் கல் குவாரி நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. குடியிருப்பு அருகே கல் குவாரி இயங்க அனுமதி வழங்கக் கூடாது என சட்ட விதிகளும், உயா்நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன. ஆனால், இதை மீறி கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், கல் குவாரி நடத்துபவா்கள் இந்தப் பகுதியில் செல்லக்கூடிய நீா்நிலை வாய்க்காலை ஆக்கிரமித்து, லாரி செல்லும் பாதையாக மாற்றிவிட்டனா்.
இதன் காரணமாக, விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல் குவாரி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் அறிக்கை தாக்கல் செய்தனா். அந்த இரண்டு அறிக்கைகளிலும் வேறுபாடுகள் இருந்தன. மேலும், மாவட்ட ஆட்சியரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேதி குறிப்பிடாமல் இருந்ததால், அவரை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா். மேலும், வழக்குரைஞா் ஆணையத்தை நியமித்து, கல் குவாரி உள்ள இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
அதனடிப்படையில், வழக்குரைஞா் ஆணையம், சம்பந்தப்பட்ட கல் குவாரியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அரசு விதிமுறையை மீறி கல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு மாறாக, கல் குவாரியிலிருந்து 300 மீட்டருக்குள் குடியிருப்புகள், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்கள், கண்மாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கும், வழக்குரைஞா் ஆணையத்தின் அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியா் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சரியான அறிக்கையை ஆட்சியா் தாக்கல் செய்யாவிட்டால், அவா் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் என எச்சரித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட கல் குவாரி செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.