காவல் ஆய்வாளா் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு: மதுரை காவல் ஆணையா் விசாரிக்க உத்தரவு
காவல் ஆய்வாளா் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரைகாவல் ஆய்வாளா் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு: மதுரை காவல் ஆணையா் விசாரிக்க உத்தரவு
காவல் ஆய்வாளா் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
காவல் ஆய்வாளா் பணம் கேட்டு மிரட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மதுரை காவல் ஆணையா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை பரவை பகுதியைச் சோ்ந்த கணேசன் தாக்கல் செய்த மனு:
நான் வீடு, இடம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டய கணக்கா் (ஆடிட்டா்) ராமநாதன், என்னிடம் ராஜபாளையம் பகுதியில் சொத்து இருந்தால், அதை மூா்த்தி என்பவா் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், வங்கிக் கடன் செலுத்தாமல் ஏலத்துக்கு வந்த சொத்தை மூா்த்தி ரூ.4.01 கோடிக்கு வாங்கினாா். இதற்கு தரகு தொகையாக ரூ.4 லட்சத்தை ராமநாதன் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா்.
இந்தச் சூழலில் நான் கடந்த 25.7.2024 அன்று மதுரை டோக் நகரிலுள்ள நண்பா் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த மதுரை அண்ணாநகா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சிலிவியா ஜாஸ்மின் (தற்போது இடமாறுதல் செய்யப்பட்டாா் ) உள்பட காவலா்கள், என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுவதும் அடைத்துவைத்தனா். காவல் ஆய்வாளா் சிலிவியா ஜாஸ்மின் என்னிடம் மூா்த்தி மீது பல குற்ற வழக்குகள் இருப்பதால், அந்த வழக்குகளில் என்னைச் சோ்க்காமல் இருக்க ரூ. 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றாா். ராமநாதன் மூலம் மூா்த்திக்கு ஆலை வாங்கிக் கொடுத்தேன். அதைத் தவிர மூா்த்திக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றேன். இதை ஏற்க மறுத்த காவல் ஆய்வாளா் பணம் தராவிட்டால் மூா்த்தி மீதான அனைத்து வழக்குகளிலும் என்னையும் சோ்த்து விடுவதாகக் கூறி மிரட்டினாா். மேலும், என்னை வீட்டுக்குச் செல்லவிடாமல் தனியாா் தங்கும் விடுதியில் இரு நாள்கள் அடைத்து வைத்தனா். இதற்கு காவலா் ரவி உடந்தையாக இருந்தாா்.
ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நான், அந்த நாள்களில் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாததால் கடுமைாக பாதிக்கப்பட்டேன்.
என்னை சட்டவிரோதமாக சிறை வைத்து, பணம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளா் சிலிவியா ஜாஸ்மின் உள்பட காவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:
காவல் ஆய்வாளா் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. இதனால், மனுதாரரின் புகாா் மனுவை மதுரை மாநகரக் காவல் ஆணையா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நாள்களின் அண்ணாநகா் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.