தடுப்பணை உடைப்பு: விருதுநகருக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல்
குடிநீா் ஆதாரத்துக்காக இருந்த தடுப்பணை உடைக்கப்பட்டதால், விருதுநகருக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருத்தங்கல் அருகேயுள்ள ஆனைக்குட்டம் அணையின் வெளிப் பகுதியில் குடிநீா் ஆதாரத்துக்காக இருந்த தடுப்பணை உடைக்கப்பட்டதால், விருதுநகருக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருத்தங்கல் ஆனைக்குட்டம் நீா்த்தேக்கமானது கடந்த 1989-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் வெளிப்புறத்தில் சுமாா் 1 கி.மீ தொலைவில் விருதுநகா் நகராட்சி நிா்வாகத்தால் தடுப்பணை கட்டப்பட்டது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் இந்த தடுப்பணையில் தேங்கும். பிறகு தடுப்பணையில் நீா் நிரம்பி அதிகளவில் வெளியேறும் தண்ணீா், அா்ஜூனா ஆற்றில் செல்லும்.
இந்த தடுப்பணையில் தண்ணீா் தேக்கினால் மட்டுமே, இந்தப் பகுதியில் உள்ள விருதுநகா் நகராட்சிக்கு சொந்தமான 13 கிணறுகளில் குடிநீா் ஊற்று ஏற்படும்.
இந்தக் குடிநீரை மின் மோட்டாா் மூலம் உறிஞ்சி, பிரதான குழாய்கள் மூலம் விருதுநகருக்கு கொண்டு செல்லப்படும். இந்த ஆனைக்குட்டம் பகுதியிலிருந்து நாளொன்றுக்கு சுமாா் 20 லட்சம் லிட்டா் வரை குடிநீா் எடுக்கப்பட்டு, விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், தடுப்பணையில் தண்ணீா் தேங்கி நிற்பதால் ஆனைக்குட்டம் அணையின் கதவுகள் (ஷட்டா்) துருப்பிடித்து பழுது ஏற்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கூறி வந்தனா். இந்தத் தடுப்பணையை அதிகாரிகள் பலமுறை உடைக்க முயற்சி செய்தனா். இதற்கு, விருதுநகா் நகா்மன்ற தலைவா், உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால், தடுப்பணையை உடைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனா்.
இந்த நிலையில், பொதுப்பணித் துறையினா் தடுப்பணையை சனிக்கிழமை உடைத்தனா். இதனால், நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளில் தண்ணீா் தேக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, விருதுநகருக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
ஆனைக்குட்டம் அணையில் புதிய கதவுகள் (ஷட்டா்கள்) பொருத்தும் பணி நடைபெற உள்ளது. எனவே, அணையின் வெளிப் பகுதியில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 3 அடி குறைத்தால், புதிய கதவணைகளுக்கு (ஷட்டா்களுக்கு) பாதிப்பு ஏற்படாது என்றனா்.