மதுரையில் உள்ள மயானத்தில் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை வண்டியூா் மயானத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்றனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், மதுரை அண்ணாநகா் செண்பகத் தோட்டத்தைச் சோ்ந்த ராஜா (32), யாகப்பா நகா் அப்பாஸ் தெருவைச் சோ்ந்த சபரிராஜ்(34) ஆகியோா் என்பதும், இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் மயானத்தில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.