முகப்பு
மதுரை

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை நீட்டிப்பு

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:49 PM
பகிர்:

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் வழக்கில் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தைச் சோ்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள்:

சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகிறோம். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த கடந்த 2009- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதைத்தொடா்ந்து, நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அவா்களுக்கு மறு குடியமா்வு, மறுவாழ்வு தொடா்பாக எதுவும் செய்யவில்லை. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற போலீஸ் பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்கின்றனா்.

எனவே, மறுவாழ்வு, மறுகுடியமா்வு வசதிகள் செய்து தராமல், 1997-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், தொழிலகப் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்துதல் விதிகளின்படி, மறுவாழ்வு, மறுகுடியமா்வு வசதிகள் செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், நிலம் கையகப்படுத்தும் விதியானது கடந்த 2013-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பே சம்பந்தப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்குத் தொடா்பாக தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலா், நில நிா்வாகப் பிரிவு இயக்குநா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →