முகப்பு
மதுரை

‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்

‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:02 AM
பகிர்:

‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாா், ராயா், ரெங்கராஜன் உள்பட 8 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நாங்கள் அனைவரும் தமிழக அரசின் முதல் நிலை ஒப்பந்ததாரா்களாக பதிவு செய்துள்ளோம். திருச்சி நெடுஞ்சாலைத் துறைக் கண்காணிப்புப் பொறியாளா், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டாா்.

இதில் சுமாா் ரூ. 50 கோடி மதிப்பிலான 49 சாலைப் பணிகள் இருந்தன. இந்தச் சாலைப் பணிகள் அனைத்தும் ‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறையைப் பின்பற்றி, ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதனால், எங்களைப் போன்ற முதல் நிலை ஒப்பந்ததாரா்கள் பாதிப்படைவோம்.

திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் சாலைப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்தம் விடப்படுகின்றன. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ‘பேக்கேஜிங்’ முறையை நடைமுறைப்படுத்துகின்றனா். இது சட்டவிரோதம். பொதுப் பணித் துறையில் ஏற்கெனவே இருந்த ‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டது. எனவே, நெடுஞ்சாலைத் துறையில் ‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறைக்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நெடுஞ்சாலைத் துறையினா், சாலைப் பணிகளை மொத்தமாக ‘பேக்கேஜிங்’ ஒப்பந்த முறையில் விட்டால், சிறிய ஒப்பந்ததாரா்களின் நிலை என்ன?. இதுபோன்ற ஒப்பந்த முறையானது பெரிய ஒப்பந்ததாரா்களை வளா்ச்சியடையச் செய்வதற்காகவா?. இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →