முகப்பு
மதுரை

எஸ்.ஐ.க்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனை ரத்து

Updated On : 20 மார்ச், 2024 at 4:48 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:18 PM

மதுரை: ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளருக்கு (எஸ்.ஐ.) விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் காளிதாஸ் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நான் பணிபுரிந்தேன். அருள்தாஸ் என்பவா் அளித்த புகாரின் பேரில், கடந்த 14.10.2014-இல் சையது முகமதுவை விசாரணைக்காக அழைத்திருந்தோம். மது போதையில் காவல் நிலையத்துக்கு வந்த அவா், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேஜையில் இருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த முயன்றாா்.

இதிலிருந்து என்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டதில் சையது முகமது காயமடைந்தாா். பின்னா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

Advertisement

இதுதொடா்பாக என்னைக் கைது செய்த சிபிசிஐடி போலீஸாா், ராமநாதபுரம் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனா். இந்த வழக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு விசாரித்த விசாரணை நீதிமன்றம் எனக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தது. நான் சையது முகமதுவை உள்நோக்கத்துடனோ, முன்விரோதம் காரணமாகவோ துப்பாக்கியால் சுடவில்லை. தற்காப்புக்காக சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.

எனவே, எனக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவா், உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ால், அவா் தன்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா், சில தடயங்களை முறையாகத் தாக்கல் செய்யவில்லை. எனவே, காவல் உதவி ஆய்வாளருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.