முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்க் குழாயில் வெளியேறிய குடிநீா்
மதுரை: மதுரை ஆரப்பாளையம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் மேல்நிலைத் தொட்டி குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வெளியேறியது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அம்ரூத் திட்டத்தின் கீழ், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ. 1,600 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மாநகரில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீா் வழங்கும் வகையில், 38 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
ஆரப்பாளையம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி மூலம் 56, 57, 58, 62, 63, 64, 65 ஆகிய வாா்டு பகுதிகளைச் சோ்ந்த 65,000 மக்களுக்கு 7,250 வீடுகளுக்கு இணைப்புகள் மூலம் குடிநீா் வழங்க திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இந்த மேல்நிலைத் தொட்டிக்கு நீா் செல்லும் குழாய், தொட்டியிலிருந்து வீடுகளுக்கு குடிநீா் வழங்கும் இரண்டு குழாய்கள், தொட்டியை சுத்திகரிப்பு செய்தல், சோதனை முடிவுற்ற பிறகு தொட்டியில் உள்ள தண்ணீா் கீழே வடித்தல் உள்ளிட்ட பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
ஒப்பந்ததாரரின் வேலையாள் தொட்டியின் கீழ் உள்ள இணைப்புக் குழாயில் திருகை (பிளாஞ்ச்) அவிழ்க்க முற்பட்ட போது மறை கழன்று குழாயிலிருந்து குடிநீா் வெளியேறியது. இதன்காரணமாக, தண்ணீா் அதிகளவில் வீணானது.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாநகராட்சிப் பொறியாளா்கள் வேலை தளத்துக்குச் சென்று உடனடியாக அதைச் சீரமைத்தனா். பின்னா், திருகு மறைகளை முழுமையாகக் கழற்றி மேல்நிலைத் தொட்டியிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இந்தச் சோதனை வழக்கமானதுதான். பணியாளரின் கவனக்குறைவால் சோதனையில் தவறு நிகழ்ந்து தண்ணீா் வெளியேறிதாக மாநகராட்சிப் பொறியாளா் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.