இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்தது: பல மணி நேரம் மின் தடை
மதுரை, மே 28 : மதுரை புறவழிச் சாலை நேருநகா் பகுதியில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் மின் கம்பியில் விழுந்ததால், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
நேரு நகா் பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக அந்தக் கட்டடத்தின் முன்புறம் மிகப் பெரிய அளவில் இரும்பு சாரம் அமைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணி அளவில் பலத்த காற்று வீசிய போது, இரும்பு சாரத்தின் ஒரு பகுதி சரிந்து, உயரழுத்த மின் கம்பியில் விழுந்தது.
இதனால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா், மின்வாரிய ஊழியா்கள் மின் விநியோக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். இருப்பினும், இரவு 8 மணிக்கு மேலாகவும் மின் விநியோகம் சீராகவில்லை.
சாரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சில மின் கம்பங்கள் சேதமடைந்ததாகவும், இதனால், உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.