திமுக ஆட்சியில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லை: அதிமுக குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் குற்றஞ்சாட்டினாா்.
திமுக ஆட்சியில் மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 41 மாத கால திமுக ஆட்சியில் மருத்துவத் துறையின் நிலை மிக மோசமாகிவிட்டது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை 6,900-ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், கடும் பணிச் சுமை, தியாக மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவா்கள் மீதான தாக்குதல் ஆகியவை தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவா் ஆறுமுகம் திமுகவினரால் தாக்கப்பட்டாா். 2023 ஆண்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நிலை மருத்துவா் அபிஷேக்கும், நெல்லை, வேலூா் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவா்களும் தாக்கப்பட்டனா். அண்மையில், திருச்சியை அடுத்த மிளகுபாறையில் உள்ள தொழிலாளா் ஈட்டுறுதித் திட்ட மருத்துவமனையில் அரசு மருத்துவா் காா்த்திகேயன் தாக்கப்பட்டாா். தற்போது, சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டிருக்கிறாா்.
தமிழகத்தில் மக்கள் உயிரை காக்கும் மருத்துவா்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை மிக மோசமானதாகும். எனவே, தமிழக அரசு மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கண்டனம்: சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவா் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன், மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டது அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதுகடும் கண்டனத்துக்குரியதாகும். அண்மைக் காலமாக, தமிழகத்தில் அரசு ஊழியா்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நடைபெறாதவாறு தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், பணியில் இருக்கும் மருத்துவா்கள், அரசு ஊழியா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.