குடும்ப பிரச்னை வழக்குகள் வழக்குரைஞா்களுக்கான நெறிமுறைகளை பரிந்துரைக்க பாா் கவுன்சிலுக்கு உத்தரவு
குடும்ப பிரச்னை வழக்குகள் வழக்குரைஞா்களுக்கான நெறிமுறைகளை பரிந்துரைக்க பாா் கவுன்சிலுக்கு உத்தரவு...
குடும்ப பிரச்னைகள் தொடா்பான வழக்குகளில், வழக்குரைஞா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இந்திய பாா் கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிவகுமாா், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோா் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்தனா். இந்த நிலையில், சிவகுமாா் தொடுத்த வழக்கில், அவா்களுக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை ரத்து செய்யக் கோரி, கலைச்செல்வி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த அண்மையில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், கே. கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்குரைஞா்களுக்கு சமூகப் பொறுப்பு உள்ளது. தம்பதியரிடையே பிரச்னை ஏற்பட்டு வழக்குரைஞா்களைச் சந்தித்தால், அவா்களைச் சோ்த்து வைக்கவே முனைப்புக்காட்ட வேண்டும். மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் செயல்படக் கூடாது. பொய் வழக்குகளை ஊக்குவிக்கவும் கூடாது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழக்குரைஞா்களுக்கு இந்திய பாா் கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும். இதை மீறும் வழக்குரைஞா்கள் மீது இந்திய பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.