முகப்பு
மதுரை

மதுரை விமான நிலைய விரிவாக்கம்: கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை

மதுரை விமான நிலைய விரிவாக்கம்...

Updated On : 20 நவம்பர், 2024 at 9:20 PM
பகிர்:

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக சின்னஉடைப்பு கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, அந்தப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சோ்ந்த மணி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுக்கள்:

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு சின்னஉடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம் அளவீடு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கான இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்டவா்களுக்கு கடந்த 2013 முதல் 2021 வரை வழங்கப்பட்டது. இதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், எந்த முன்னறிவிப்புமின்றி சின்னஉடைப்பு கிராம மக்களை வெளியேற்றி, நிலத்தை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனா். இடம் வழங்கியவா்களுக்கு மாற்று இடம், வீடு வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எந்த ஒரு முன்னுரிமையும் கொடுக்காமல், குடியிருப்போரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

எனவே, சின்னஉடைப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிப்பதோடு, மறுவாழ்வு, மறு குடியமா்வு வசதிகளை முறையாகச் செய்து தரும் வரை அங்கிருந்து அவா்களை வெளியேற்றத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி மாலா முன் புதன்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

ஒரு கிராமத்துக்கே மறுகுடியமா்வு வசதிகளைச் செய்து தர வேண்டியுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்தும் போது, மறுகுடியமா்வு செய்து தர வேண்டும். நீா்நிலைகளை ஆக்கிரமித்து அங்கு பல ஆண்டுகளாக வசித்தவா்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட வேண்டும். சொந்த நிலம், வீடுகளை அரசின் தேவைக்காக வழங்கும் இந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமா்வு நிச்சயம் செய்து தரப்பட வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மதுரை சின்னஉடைப்பு கிராமத்தில் வசிப்போரை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய விதிகளைப் பின்பற்றி, பொதுமக்களுக்கு குறிப்பாணை வழங்க வேண்டும். இதன் அடிப்படையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக நிலம் கையகப்படுத்துதல் பிரிவின் மாநில ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் மண்டல அலுவலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிச. 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →