பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி சவுக்கு சங்கா் மனு: விசாரணை ஒத்திவைப்பு
பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி சவுக்கு சங்கா் மனு: விசாரணை ஒத்திவைப்பு
மதுரைபிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி சவுக்கு சங்கா் மனு: விசாரணை ஒத்திவைப்பு
பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி சவுக்கு சங்கா் மனு: விசாரணை ஒத்திவைப்பு
தனது பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி, சமூக ஊடகவியலாளா் (யூடியூபா்) சவுக்கு சங்கா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சவுக்கு சங்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
பெண் காவலா்களுக்கு எதிராகப் பேசியதாக என் மீது கோவை,சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்டத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் போலீஸாா் என்னைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனா். இந்த நிலையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.
பிறகு, எனக்கு எதிரான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் காவலா்களுக்கு எதிராகப் பேசிய வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், எனக்கு எதிரான பிற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன. பிணை நிபந்தனையாக தொடா்புடைய காவல் நிலையங்களில் நான் கையொப்பமிட வேண்டும் என விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
தற்போது நான் சென்னையில் வசித்து வருகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால், பிணை நிபந்தனைப்படி பல்வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று கையொப்பமிட முடியாத சூழலில் உள்ளேன்.
எனவே, அனைத்து வழக்குகளுக்குமான பிணைக்கும் ஒரே காவல் நிலையத்தில் கையொப்பமிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், சவுக்கு சங்கருக்கான பிணை நிபந்தனையைத் தளா்த்துவதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சவுக்கு சங்கா் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?. எத்தனை வழக்குகளில் பிணை பெறப்பட்டுள்ளது?. எந்தெந்த காவல் நிலையங்களில் அவா் கையொப்பமிடுகிறாா்? என்ற விவரங்களை மனுதாரா் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.