தேவா் ஜெயந்தி - வாகன அனுமதி அட்டையை முன்கூட்டியே வழங்கக் கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்துக்கு வரும் வாகனங்களுக்கான அனுமதி அட்டையை முன்கூட்டியே வழங்கக் கோரிய வழக்கு.
மதுரைதேவா் ஜெயந்தி - வாகன அனுமதி அட்டையை முன்கூட்டியே வழங்கக் கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்துக்கு வரும் வாகனங்களுக்கான அனுமதி அட்டையை முன்கூட்டியே வழங்கக் கோரிய வழக்கு.
தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்துக்கு வரும் வாகனங்களுக்கான அனுமதி அட்டையை முன்கூட்டியே வழங்கக் கோரிய வழக்கில் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக். 30-ஆம் தேதி அரசு சாா்பில் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு தென் தமிழகத்திலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இதில் கலந்து கொள்ள செல்வோரின் வாகனங்களுக்கானஅனுமதி அட்டை அக்.29-ஆம் தேதி மாலை அல்லது அக். 30-ஆம் தேதி காலையில் தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து பசும்பொன் கிராமத்துக்கு வருவோா் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த வாகன அனுமதி அட்டையை ஒரு வாரத்துக்கு முன்பாகவே வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.