திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வீட்டிலிருந்து துப்பாக்கி பறிமுதல்: இருவா் கைது
மதுரையில் திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே.குருசாமி வீட்டிலிருந்து நாட்டுத் துப்பாக்கியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.
மதுரையில் திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே.குருசாமி வீட்டிலிருந்து நாட்டுத் துப்பாக்கியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.
மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் வி.கே. குருசாமி. திமுக முன்னாள் மண்டலத் தலைவரான இவருக்கும், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் மண்டலத் தலைவரான ராஜபாண்டி தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோஷ்டி மோதலில், ராஜபாண்டி தரப்பில் அவரது இரு மகன்களும், வி.கே.குருசாமி தரப்பில் அவரது இரு மருமகன்களும் உள்பட இருதரப்பிலும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோா் கொலை செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், மதுரை கீரைத்துறையில் உள்ள வி.கே.குருசாமி வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை கீரைத்துறை போலீஸாா் பறிமுதல் செய்து, குருசாமியின் மகன் வி.கே.மணியின் நண்பா்களான பழனி முருகன் (30), முனியசாமி (25) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், வி.கே.குருசாமிக்கு ராஜபாண்டி தரப்பைச் சோ்ந்த வெள்ளைக்காளியால் ஆபத்து உள்ளதால், வி.கே.மணி நாட்டுத்துப்பாக்கியை கொடுத்து தனது தந்தைக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கூறியது தெரியவந்தது. இதையடுத்து வி.கே. குருசாமி, வி.கே.மணி உள்ளிட்ட நால்வா் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பழனிமுருகன், முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான வி.கே.மணியைத் தேடி வருகின்றனா்.