கூடலழகா் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவை
மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஐந்து கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஐந்து கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், ஆழ்வாா்களால் பாடல் பெற்ற தலமுமாகவும் மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமி தினத்தன்று ஐந்து கருட சேவை நடைபெறும்.
இதன்படி, வியாழக்கிழமை கோயில் முன் ஐந்து கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி, கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து தங்கக் கருடவாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள், மற்றொரு கருட வாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினா்.
இதே போல, மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் அமைந்துள்ள வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து வீரராகவப் பெருமாள், வடக்குமாசி வீதியில் அமைந்துள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதா், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசுவாமி கோயிலிலிருந்து மதனகோபாலசுவாமி தனித்தனியாக மூன்று கருட வாகனங்களில் கூடலழகா் கோயில் முன் எழுந்தருளினா். இதையடுத்து, ஐந்து கருட சேவை நடைபெற்றது.
பின்னா், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, ஐந்து கருட வாகனங்களில் பெருமாள்கள் மாசி வீதிகளை வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.