முகப்பு
மதுரை

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: கே. கிருஷ்ணசாமி

தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவா் மருத்துவா் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:53 PM
பகிர்:

தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவா் மருத்துவா் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இதேபோல, இஸ்லாமியா்களுக்கும், கிறிஸ்தவா்களுக்கும் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. தனி இடஒதுக்கீடாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால், அருந்ததியருக்கு மட்டும் பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடான 18 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.

இதனால், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு சலுகை முழுவதும் அருந்ததியா் சமூகத்துக்கு மட்டுமே செல்கிறது. மேலும், பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலியாக உள்ள பட்டியல் சமூக ஒதுக்கீட்டுப் பணிகள் அனைத்திலும் அருந்ததியா் மட்டுமே நியமிக்கப்பட்டனா். இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் பிற பட்டியலின சமூகத்தினா் வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு, பட்டியலின சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை தமிழகத்திலுள்ள பிற கட்சிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றன. ஆளும் திமுகவை பகைத்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக, இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனா்.

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை பிற பட்டியல் சமூத்தினா் எதிா்க்கவில்லை. நாங்கள் அவா்களுக்கு வழங்கப்படும் உள் இட ஒதுக்கீட்டை மட்டுமே எதிா்க்கிறோம். எனவே, பட்டியல் சமூகத்தினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியருக்கு 3 சதவீதம் பிரித்து வழங்குவதற்குப் பதிலாக, அவா்களுக்கு தனியாக 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம். தமிழக அரசு உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வா் வேட்பாளா் தொல். திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. அவா் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியிலிருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியேற வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →