முகப்பு
மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குறுக்கு விசாரணை கோரிய மனு தள்ளுபடி

காவல் உதவி ஆய்வாளரின் மனு தள்ளுபடி.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:29 AM
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், விசாரணை நீதிமன்ற நீதிபதி, அரசு மருத்துவரிடம் குறுக்கு விசாரணை செய்யக் கோரிய காவல் உதவி ஆய்வாளரின் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கு தொடா்பான விசாரணையானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு சாட்சிகளாக தூத்துக்குடி நீதித்துறை நடுவா், உடல்கூறாய்வு செய்த மருத்துவா் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

விசாரணை நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா், அரசு மருத்துவரிடம் எனது தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, அவா்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தில் திறந்த வெளியில் நீதித்துறை நடுவா் சாட்சியம் அளித்துள்ளாா். இந்த நிலையில், அவரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்பது, இந்த வழக்கை காலம் கடத்துவதுபோல உள்ளது.

விசாரணை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை மேற்கொள்ள மனுதாரா் தரப்புக்கு வாய்ப்பளித்தும் பயன்படுத்தவில்லை. எனவே, மனுதாரரின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →