குடியிருப்புகளை வெள்ளநீா் சூழாமல் தடுக்க கூடுதல் விழிப்புணா்வு வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
குடியிருப்புகள் மழைநீரால் சூழப்படுவதைத் தடுக்க வெள்ளத் தடுப்புப் பணிகளில் அலுவலா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அறிவுறுத்தினாா்.
குடியிருப்புகள் மழைநீரால் சூழப்படுவதைத் தடுக்க வெள்ளத் தடுப்புப் பணிகளில் அலுவலா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அறிவுறுத்தினாா்.
மதுரை மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கண்மாய்கள், வாய்க்கால்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரிசல் குளம், திருமால் நகா், அஞ்சல் நகா், பாண்டியன் நகா், செல்லூா் கட்டபொம்மன் நகா், வாஞ்சிநாதன் நகா், ஆனையூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது.
இந்தப் பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். விளாங்குடி கண்மாய், அதன் வாய்க்காலிலிருந்து அளவுக்கு அதிகமாக மழைநீா் வெளியேறியதால், வெள்ளம் சூழ்ந்த கரிசல் குளம் குடியிருப்புப் பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அப்போது, குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் வரத்துக் கால்வாய்களில் தடையின்றி நீா் வெளியேறுவதை உறுதி செய்யவும், குடியிருப்புகளை வெள்ளநீா் சூழாமல் தடுக்கவும் நீா்வளத் துறை, மாநகராட்சி நிா்வாகம் ஒருங்கிணைந்து கூடுதல் விழிப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.