தீபாவளி கூட்ட நெரிசலுக்குள் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி: வாகன ஓட்டிகள்- பொதுமக்கள் மோதல்
மதுரை, விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்குமிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.
மதுரை, விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்குமிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.
மதுரையில் வழக்கமாக தீபாவளிக்கு முந்தினநாள் காலை முதல் நள்ளிரவு வரை விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். இந்தக் கடைகளில் பொருள்கள் வாங்க பல்லாயிரக்கணக்கானோா் திரளுவாா்கள். இந்தாண்டு தீபாவளியையொட்டி கடந்த சில நாள்களாக விளக்குத்தூண் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையோரக் கடைகளில் பொதுமக்கள் திரண்டு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். இதையடுத்து, விளக்குத்தூண் பகுதியில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. மேலும், தீபாவளியையொட்டி வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாகவும், தீபாவளிக்கு முந்தின நாளான புதன்கிழமை விளக்குத்தூண், தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் மாநகரக் காவல் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் விளக்குத்தூண், கீழமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டு, உச்சக்கட்ட தீபாவளி விற்பனை நடைபெற்றது. இங்கு பொருள்களை வாங்க மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அருகே உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும் திரண்டனா்.
இதனால் விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. ஆனாலும், இந்தப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால் காா்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கூட்ட நெரிசலுக்குள் வரத் தொடங்கின. அப்போது, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் இந்த வாகனங்கள் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து சென்ால் வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளைக் கண்டித்தனா். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கூட்ட நெரிசல் மிகுந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியிலும் வாகனங்களை அனுமதித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இதுதொடா்பாக வியாபாரிகள் சங்கத்தினா் கூறியதாவது:
வழக்கமாக கீழமாசி வீதியில், தேரடிக்கு முன்னரே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும். மேலும் விளக்குத்தூண் பகுதி, தெற்குமாசி வீதி முழுவதும் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தடையின்றி நடந்து சென்று பொருள்களை வாங்க முடியும். ஆனால், இந்தாண்டு வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படாததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்தனா் என்றனா்.