முகப்பு
மதுரை

துணைக்கோள் நகரத் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு: அரசின் முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 ஆகஸ்ட், 2025 at 6:33 PM
பகிர்:

புதுக்கோட்டை முள்ளூா் பகுதியில் துணைக்கோள் நகரத் திட்டத்தைச் செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் முதன்மைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறை செயலா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த நிரோஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை முள்ளூா் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் துணைக்கோள் நகரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பலருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்தத் திட்டத்துக்கு அந்தப் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட நிலம் நன்செய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலங்களை குடியிருப்பு அல்லது வணிகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு இதுவரை தமிழக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியும் பெறவில்லை. இந்தத் திட்டத்தில் 1,703 வீட்டுமனைகள் உருவாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அறிவிப்புகளில் 1,679 மனைகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம், 24 மனைகளை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசின் வழிகாட்டுதல்கள், அரசாணைகள், விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன.

எனவே, தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், கட்டட விதிகளை முழுமையாகப் பின்பற்றும் வரை முள்ளூா் துணைக்கோள் நகரத் திட்டத்தின் கீழ் யாருக்கும் நிலத்தை ஒதுக்கீடு செய்யவோ, விற்பனை செய்யவோ, இதுகுறித்து விளம்பரம் செய்யவோ கூடாது எனத் தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடா்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வீட்டு வசதி வாரியத்தில் வீட்டுமனை பெற்றவா்கள் அதற்கான பத்திர ஆவணங்களைப் பெறுவதற்கு பல ஆண்டுகளாகிவிடும். இவ்வாறு உள்ள சூழலில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகள் விரைந்து செயல்படுவது சந்தேகமே. இருப்பினும், இந்த மனு குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.