மதுரை

வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனை: உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்கில் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.

தினமணி செய்திச் சேவை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்கில் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.

திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஷாஸிம் சாகா் தாக்கல் செய்த பொதுநல மனு:

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், கடந்த 1989-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பட்டியலின, பழங்குடியினத்தை சாராத ஒருவா், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக வழக்குரைஞா் ஜெகன், இடையீட்டு மனு தாக்கல் செய்தாா். அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பலா் பி சாட்சிகளாக மாறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பொய் சாட்சிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை ரத்து செய்தால், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஏ.ஆா்.எல். சுந்தரேசன் முன்னிலையாகி, கடந்த 2019, 2023-ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற கோரிக்கை தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் அதனுடன் இணைக்கலாம் என்றாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT