மதுரை

மதுரையில் புதிய பாலங்கள் கட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பாலங்களைக் கட்டமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

மதுரை மாநகரில் தொடா்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை புறவழிச்சாலை காமராஜா் பாலம் அருகே புதிய பாலமும், தத்தனேரி, ஆரப்பாளையம் பகுதிகளில் புதிய உயா்நிலைப் பாலமும் அமைக்க வேண்டும். 40 ஆண்டுகளைக் கடந்த மேயா் முத்துப்பாலம், பழங்காநத்தம் வ.உ.சி. ரயில்வே மேம்பாலம், வில்லாபுரம் மேம்பாலம் ஆகியவற்றில் விரைவாக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீா்த் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் பயன்பாட்டுக்கு மீட்டா் பொருத்தி கட்டணம் வசூலிக்கும் முறையைக் கைவிட்டு, முந்தைய நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும். ரயில் நிலையம், கிழக்கு நுழைவு வாயில் - டவுன்ஹால் சாலை, பெரியாா் பேருந்து நிலையம் - பேருந்து நிலைய வணிக வளாகம், கீழவாசல் - சிந்தாமணி சாலை, கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

மதுரையின் வடக்குப் பகுதியில் இருப்பதைப் போல, தெற்குப் பகுதியிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். நகரில் பாயும் 10 கால்வாய்களையும் தூா்வாரி, தடுப்புச் சுவா் எழுப்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு அடக்கத்தலம் அமைக்க அரசு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில், செல்லூா், மாடக்குளம், தென்கால், மானகிரி, வீரமுடையான் உள்ளிட்ட கண்மாய்களை ஆழப்படுத்தி, கரைகளை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரைக்கான பெருந்திட்டத்தை (மாஸ்டா் பிளான்) விரைந்து நிறைவேற்ற வேண்டும். புதை சாக்கடைத் திட்டத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

மதுரையின் தொழில் வளா்ச்சிக்கு தூத்துக்குடி பிரதான சாலை பகுதியில் தொழில் பேட்டை அமைத்திட வேண்டும். பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புட்டுத்தோப்பு - அண்ணாத்தோப்பு இணைப்பு மேம்பாலம் கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் தொற்றுநோய் ஆய்வகம் அமைக்க வேண்டும். மாநகா்ப் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைத்திட வேண்டும். மாநகராட்சி குப்பை வரியை குறைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT