முகப்பு
மதுரை

விரிவடைகிறது மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான உத்தேச முடிவு அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிா்வாகமும், குடிநீா் வழங்கல் துறையும் வெளியிட்டன.

Updated On : 1 ஜனவரி, 2025 at 10:56 PM
பகிர்:

மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான உத்தேச முடிவு அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிா்வாகமும், குடிநீா் வழங்கல் துறையும் வெளியிட்டன.

மதுரை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. இதன் எண்ணிக்கையை 120-ஆக உயா்த்தும் வகையில் எல்லை விரிவாக்கத்துக்கு மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாநகராட்சி எல்லைக்கு அருகாமையில் உள்ள ஒரு பேரூராட்சி, 16 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வது தொடா்பாக தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை செவ்வாய்க்கிழமை உத்தேச முடிவு அரசாணையை வெளியிட்டது.

இதில், பரவை பேரூராட்சிப் பகுதிகள், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, அரும்பனூா் (பகுதி), கொடிக்குளம் (பகுதி), செட்டிகுளம், கோவில்பாப்பாகுடி, ஆலாத்தூா், பேச்சிக்குளம், விரகனூா், நாகமலைப்புதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி, அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய ஊராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஊராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, நீா்வடிகால் கட்டமைப்பில் பல்வேறு சவால்கள் நிலவும் நிலையில், மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும், ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், திட்டமிட்ட வளா்ச்சி, மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு, திரவக் கழிவு மேலாண்மைக்கு ஏதுவாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →