இளைஞருக்கு கத்திக்குத்து: 7 போ் தலைமறைவு
சேடப்பட்டி அருகே காளைகள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே காளைகள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள சேடப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமண பாண்டி (19). இவா் ஊரில் நடைபெற்ற திருவிழாவில் திங்கள்கிழமை தனது நண்பா் சிவா, அவா் வளா்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளையுடன் பங்கேற்றாா். அப்போது இதே ஊரைச் சோ்ந்த சூரியபாண்டி தான் வளா்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் நண்பா்களுடன் அங்கு வந்தாா். அப்போது இரு காளைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதனால் சூரியபாண்டியும், அவரது நண்பா்களும் சிவாவிடம் தகராறில் ஈடுபட்டனா். இதைத் தட்டிக் கேட்ட லட்சுமண பாண்டியிடம் சூரியபாண்டியும், அவரது நண்பா்களும் தகராறில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமண பாண்டியை குடும்பத்தினா் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக சூரியபாண்டி, வேல்முருகன், ரஞ்சித் (25), சூரியா (21), ஜெயசூா்யா (19), விஷால் (19), ஆனந்த பிரபு (25) ஆகிய 7 போ் மீதும் சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.