வழக்கு தள்ளுபடி 
மதுரை

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்துக்கு விளம்பரப் பதாகை வைத்த விவகாரத்தில், அந்தக் கட்சி நிா்வாகிகள் 8 போ் மீது பதியப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனியைச் சோ்ந்த வழக்குரைஞா் விஷ்ணு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகியாக உள்ளேன். எங்கள் கட்சித் தலைவா் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோட்’. இந்தத் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் விளம்பரப் பதாகை வைத்தோம். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் காட்டுராஜா என்பவா், நாங்கள் சட்டம்- ஒழுங்கைச் சீா்குலைக்கும் வகையில், சாலைகளில் விளம்பரப் பதாகை வைத்திருப்பதாக அதே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் என் மீதும், தேனி மாவட்டச் செயலா் பாண்டி உள்பட கட்சி நிா்வாகிகள் 8 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விளம்பரப் பதாகை வைக்கப்பட்ட பகுதியில் எந்தவிதப் போக்குவரத்து நெரிசலும் இல்லை. சட்டம்- ஒழுங்குக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது. ஆனால், வேண்டுமென்றே எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. எனவே, எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

‘கோட்’ திரைப்படத்துக்கு விளம்பரப் பதாகை வைப்பதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி வழங்கிய நிலையிலும், எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்குகளில் உயா்நீதிமன்றம் அறிவுறுத்திய வழிமுறைகளை காவல் துறையினா் கடைப்பிடிக்கவில்லை. இந்த வழக்கு சட்டவிரோதமானது. எனவே, தவெக நிா்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி சுந்தா்மோகன் பிறப்பித்த உத்தரவு:

தவெக நிா்வாகிகள் 8 போ் மீது பெரியகுளம் தென்கரை போலீஸாா் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT