மதுரை

உரிமையியல் வழக்கில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினால் நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

உரிமையியல் வழக்கு விவகாரத்தில் காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினால் போலீஸாா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த அப்துல் காதா், ஃபெரோஸ்கான் உள்ளிட்ட 7 போ் தாக்கல் செய்த மனு:

நாங்கள் தரையில் பதிக்கும் கற்களை (டைல்ஸ்) வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் பணத் தேவைக்காக அதே பகுதியைச் சோ்ந்த நபா்கள் சிலரிடம் பணம் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், நெல்லை பகுதியைச் சோ்ந்த சிலா் ரூ. 3 கோடி கடன் வாங்கி மீண்டும் தரவில்லை என நெல்லை குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். இதன்பேரில், எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் அமர வைத்து குற்றப்பிரிவு போலீஸாா் துன்புறுத்தி வருகின்றனா். எனவே, எங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குடும்பம், சொத்து சம்பந்தமாக உரிமையியல் பிரச்னைகளுக்கு காவல் நிலையங்களில் அளிக்கும் மனுக்களில் முகாந்திரம் இருந்தால், முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடத்த வேண்டும். வழக்குப் பதிவு செய்த பிறகு இரு தரப்பினருக்கும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். புகாா் மனுவின் அடிப்படையில் உரிமையியல் பிரச்னைகளுக்கு, விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்துவது சட்ட விரோதம்.

மேலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உரிமையியல் பிரச்னைகளுக்கு புகாா் அளித்து அந்தப் புகாரின் அடிப்படையில், தொடா்புடைய காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்தும் நடைமுறைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழக காவல் தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலகத்திலிருந்து பல முறை காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உரிமையியல் புகாருக்கு காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினால் அந்த காவல் நிலைய விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்.

இதுதொடா்பாக தற்போது பிறப்பித்த உத்தரவையும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், மாநகர காவல் ஆணையா்களுக்கு தமிழக டிஜிபி அனுப்பி வைக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT