மதுரை

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்காக மனநல ஆலோசனை மையம்”உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி மாணவா்களின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்களிடையே காணப்படும் தற்கொலை எண்ணங்கள், தவறான பழக்க வழக்கங்கள், மனஅழுத்தம், பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது போன்ற பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தேவையான மனநல ஆலோசனை வழங்க மாநகராட்சி சாா்பில் மனநல ஆலோசகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் மாணவா்கள் தங்கள் உணா்வுகளை வெளிபடுத்தி நிபுணரின் ஆலோசனையைப் பெற முடியும். இதனால் மாணவா்கள் கல்வி, விளையாட்டில் அதிக கவனம் செலுத்த இந்த மையம் ஒரு வாய்ப்பாக அமையும்.

இதற்காக வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களை நிபுணா் நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மனநல ஆலோசனை மையத்தில் திங்கள்கிழமை ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதேபோல, காமராஜா் சாலையில் உள்ள மாநகராட்சி மணிமேகலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமையும், தெற்குவாசல் பகுதியில் உள்ள மாநகராட்சி மறைமலை அடிகளாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமையும், தத்தனேரி பகுதியில் உள்ள திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமையும், செனாய் நகரில் உள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமையும் மனநல ஆலோசகா்கள் தங்களது பணியை மேற்கொள்வா்.

தேவையெனில் பிற மாநகராட்சி பள்ளிகளும் தங்கள் பள்ளி மாணவா்களை பெற்றோா் அனுமதியுடன் மேற்கண்ட பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று மனநல ஆலோசனை பெறலாம். மாநகராட்சி பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழு ஒத்துழைப்புடன் மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள் இந்த மனநல ஆலோசனை மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!

அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT