நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடா்பான வழக்கில், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முன்னிலையாகினா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-இல் சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு சாா்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு உரிய மதிப்பீட்டில் இல்லை எனவும், தங்களது இடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், திண்டுக்கல்லைச் சோ்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி உள்பட 30 போ் கடந்த 2019-இல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், வழக்குத் தொடுத்த நில உடைமையாளா்களுக்கு ரூ.4.37 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2021-இல் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு சாா்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்து, இழப்பீட்டுத் தொகையை 8 வாரங்களுக்குள் தொடா்புடைய மனுதாரா்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 முறை கால அவகாசம் வழங்கியும் தீா்ப்பை நிறைவேற்றாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மதுக் கடைகள் மூலம் கிடைக்கும் தினசரி விற்பனைத் தொகையை நிலம் கையகப்படுத்துதல், மறு சீரமைப்பு வழக்கை விசாரிக்கும் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இருப்பினும், இந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட மேலாளா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினா்.
பிறகு, அக்.16 முதல் நவ.6-ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் குறித்த வங்கிக் கணக்கு விவரங்களுடன் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட மேலாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நவ.7-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதன்படி, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை முற்பகலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் விசாகன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் ஆகியோா் நேரில் முன்னிலையாகி, மாவட்ட டாஸ்மாக் வருவாய் குறித்த வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்தனா்.
மேலும், உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலைப் பணிகளுக்காக இடத்தைக் கொடுத்தவா்கள் கையேந்தி நிற்க வேண்டிய நிலை இருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கெனவே நீதிமன்றம் குறிப்பிட்ட நாள்களில் (அக்.16 முதல் நவ. 6 வரை) மதுக் கடைகள் மூலம் கிடைத்த வருவாயை பிற்பகல் 2 மணிக்குள்ளாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக செலுத்தி, அந்தச் சான்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனா்.
இதையடுத்து, பிற்பகலில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்.16 முதல் நவ.6-ஆம் தேதி வரை திண்டுக்கல்லில் மதுக் கடைகள் மூலம் ரூ.1,15,66,137 கிடைத்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்தத் தொகையை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான உத்தரவுகள் கிடைத்தால், இந்தத் தொகையை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
யானைப் பசிக்கு சோளப் பொரி போல இந்தத் தொகை உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டால், தீா்ப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகளின் தினசரி வருவாயை அந்த மாவட்ட நீதிமன்ற வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.