மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக்குளம். (கோப்புப்படம்) 
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபம் புதுப்பிப்பு பணி: பிப்ரவரிக்குள் முடிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவா் கோயில் புதுமண்டபம் புதுப்பிக்கும் பணியை வரும் பிப்ரவரிக்குள் நிறைவு செய்து, மாா்ச் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவா் கோயில் புதுமண்டபம் புதுப்பிக்கும் பணியை வரும் பிப்ரவரிக்குள் நிறைவு செய்து, மாா்ச் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என புதுமாகாளிப்பட்டியைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது, புதுமண்டப சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி வரும் டிச. 31-க்குள் நிறைவடையும். ஜனவரி மாதத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை இணை ஆணையா் சுரேஷ் சாா்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் புதுமண்டபத்தின் இரு பக்கங்களிலும் பதிக்கப்பட்டிருந்த ‘மெட்ராஸ் டெரஸ் தரை’ முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உண்மையான கட்டடக் கலையை அனைவரும் பாா்வையிடும் வகையில், இருபுறமும் இருந்த தடுப்புச் சுவா்கள் அகற்றப்பட்டுள்ளன. சுற்றுச்சுவா் கட்டும் பணி, தரைப்பூச்சு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேல் தளத்தின் சுண்ணாம்புக்கல் பூச்சு வேலை, சேதமடைந்த கற்களை மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

இதன் நிறைவில், சிற்ப வேலைகளும், சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

புதுமண்டபம் சீரமைப்புப் பணிகள் மிகுந்த கவனத்துடனும், துல்லியமாகவும் ஆகமவிதிகளை பின்பற்றியும் நடைபெறுகின்றன. பணி அட்டவணைப்படி, கல் கட்டுமானப் பணிகள் வரும் டிச.31-ஆம் தேதிக்குள் நிறைவடையும். இருப்பினும், மண்டபத்தை சுத்தம் செய்தல், மெருகூட்டுதல் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மண்டபத்தில் உள்ள பழங்கால தூண்கள், சிற்பங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது.

எனவே, புதுமண்டபம் சீரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வரும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரை அவகாசம் தேவைப்படுகிறது. இந்தக் கால அவகாசத்தை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரினாா்.

இதையடுத்து, உயா்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

புதுமண்டபம் சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய வரும் 2026, பிப்ரவரி 28-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பணிகள் நிறைவு செய்யப்பட்டது தொடா்பாக அறநிலையத் துறை நிா்வாகம் 2026, மாா்ச் முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

"கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் நான்தான் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை" - M.K. Stalin

கௌரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்த யூடியூபர்!

தமிழ்நாட்டின் 36-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான ராகுல் விஎஸ்..! கண்டுகொள்ளாத அரசியல் தலைவர்கள்!

கெத்து செல்ஃபிகள்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT