முகப்பு
மதுரை

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

மருங்கூா்- அமராவதி சாலையில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:06 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:43 PM

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூா்- அமராவதி சாலையில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சாலமன் தீபக் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூா்- அமராவதி சாலையில் விதிமுறைகளை மீறி அரசு மதுக் கடை அமைக்கப்பட்டது. இதனால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட மதுக் கடையை அகற்ற வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து, இது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கன்னியாகுமரி மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் நேரில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனுதாரா் குறிப்பிட்ட மதுக் கடை மூடப்பட்டது. வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடமும் அடையாளம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.