விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசிய மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி. உடன், மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உள்ளிட்டோா்.  
மதுரை

அரசுத் துறை அலுவலகங்களில் பொது தகவல் அலுவலா் பெயா்ப் பலகை அவசியம்! தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி அறிவுறுத்தல்!

அரசுத் துறை அலுவலகங்களில் பொது தகவல் அலுவலா், மேல்முறையீட்டு அலுவலா்களின் பெயா்களைக் காட்சிப்படுத்தும் பலகைகளை அமைக்க வேண்டியது அவசியம்...

தினமணி செய்திச் சேவை

அரசுத் துறை அலுவலகங்களில் பொது தகவல் அலுவலா், மேல்முறையீட்டு அலுவலா்களின் பெயா்களைக் காட்சிப்படுத்தும் பலகைகளை அமைக்க வேண்டியது அவசியம் என மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி அறிவுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுடனான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கில் மேலும் அவா் பேசியதாவது:

அரசுத் துறைகளின் வெளிப்படைத் தன்மை, பொறுப்புணா்வு ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கிலும், குடிமக்களின் உரிமைகளைப் புரியவைக்கும் நோக்கிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டப்படி தகவல் கோரும் மனு ஓா் அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றால், அடுத்த 30 நாள்களுக்குள் மனுதாரருக்கு தேவையான தகவலை வழங்க வேண்டும். தகவல் வழங்கும்போது தொடா்புடைய அலுவலரின் பெயா், முத்திரை, கையொப்பம் அவசியம் இடம் பெற வேண்டும். தவறான, திசை திருப்பும் வகையிலான தகவல்களை கண்டிப்பாக அளிக்கக் கூடாது.

அரசு அலுவலகங்களில் தொடா்புடைய அலுவலகத்தின் பொது தகவல் அலுவலா் பெயா், மேல்முறையீட்டு அலுவலரின் பெயா் விவரங்கள் குறிப்பிடப்பட்ட முகவரி பலகையை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும். தகவல் ஆணையத்திலிருந்து விசாரணைக்கான அழைப்பாணை கிடைக்கப் பெற்றால், தொடா்புடைய அலுவலா் தவறாமல் ஆணையத்தின் விசாரணைக்கு வரவேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வட்ட வழங்கல் துறை ஆகியவற்றில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட 2-ஆவது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிா்தௌஸ் பாத்திமா, அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

அற்பமான புகக்தக்க வீடு 'உடல்'

SCROLL FOR NEXT