இளைய தலைமுறையினா் விழிப்புணா்வுடன் செயல்பட கல்வி கற்பது அவசியம் என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன் அறிவுறுத்தினாா்.
மதுரை பனகல் சாலையில் உள்ள இந்திய மருத்துவச் சங்க அரங்கத்தில் தமிழியக்கம் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தமிழியக்கத்தின் நிறுவனரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ. விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தியா பல்வேறு மொழி, இனம், சமூகம் என பன்முகத் தன்மை கொண்டது. நமது நாட்டில் 121 மொழிகள் வழக்கில் உள்ளன. பேச்சு வழக்கில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டுடன் மக்களாட்சி நடைபெறுகிறது.
இந்தியாவில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, 28 சதவீதம் போ் மட்டுமே நமது நாட்டில் உயா் கல்வி பயில்கின்றனா். தென் மாநிலங்களில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, தமிழகத்தில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை, கேரள மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
உலக நாடுகளுடன் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியைக் கணக்கிடும் போது, நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால், தனிநபா் வருவாயைக் கணக்கிடும் போது, 140 -ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
தமிழ் தேசியமும், இந்திய தேசியமும் வேறு, வேறு அல்ல. ஆரியத்திடமிருந்து தமிழைக் காப்பாற்றியது திராவிட இயக்கம்தான்.
வரலாற்றில் மதுரை நகருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தியடிகள் தனது ஆடையை மாற்றிக் கொண்டாா். திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கும் அடித்தளமாக அமைந்தது மதுரை நகரம்.
தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய இளம் தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது பெருமைதான். ஆனால், தமிழ் தெரியாமல் போய்விடக் கூடாது. குறைந்தபட்சம் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயரை வைக்க முன்வர வேண்டும்.
தமிழா்கள் வீரம் மிக்கவா்களாகச் செயல்படுவது மட்டுமன்றி, விழிப்புணா்வுடனும் செயல்பட வேண்டும். இதற்கு அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்றாா் அவா்.
இந்த விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழியக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அப்துல் காதா், பொருளாளா் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளா் ஷேக்நபி, மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் முகமது இதிரிஸ், மருத்துவா் சேது குமணன், புலவா் பதுமனாா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் பலா் விழாவில் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தமிழியக்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பழனிசாமி வரவேற்றாா். மாநகரச் செயலா் காளிமுத்து நன்றி கூறினாா்.