சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்கண்ணா உள்பட 35 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
கமுதியில்..: கமுதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக கமுதி திமுக நகர் தலைவர் அம்பலம்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசு,ஒன்றிய இளைஞரணி செயலர் சண்முகநாதன் மற்றும் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய திமுக புரவலர் அணி தலைவர் பாரதிதாசன்,வில்லி,போஸ்,தணிக்கோடி உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை கமுதி காவல்துறையினர் கைது செய்தனர்.அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
திருவாடானையில்..: திருவாடானை ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருவாடானை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.
முதுகுளத்தூரில்..: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுக மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி (கிழக்கு),முத்துராமலிங்கம் (மேற்கு), மாவட்ட திமுக விவசாய அணி துணைச் செயலாளர் ஆப்பனூர் கே.என்.குருசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் டி.ராஜசேகர், முன்னால் ஒன்றியச் செயலாளர் முனியசாமி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், நகரச் செயலாளர் ஜஷகான் உள்ளிட்ட திமுகவினர் 60 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
சிவகங்கையில்..: சிவகங்கை நகர் திமுக சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சி.எம்.துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் மணிமுத்து, தெற்கு ஒன்றியச் செயலர் ஜெயராமன்,வடக்கு ஒன்றியச் செயலர் முத்துராமலிங்கம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் சிவகங்கை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூரில்..: திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திருப்பத்தூர் திமுக நகரச் செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் 25-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை நல்லூரணிக்கரை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் நகரச் செயலர் பழனியப்பன் தலைமையில் 30 திமுகவினர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் திருப்பத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 342 பேரை போலீஸார் கைது செய்தனர்.அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.
காரைக்குடியில்..: காரைக்குடி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப. சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் நகரத் தலைவர் பாண்டிமெய்யப்பன்,சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.மாங்குடி, திமுக நகரச்செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலைமறியல் செய்யமுயன்றனர். காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து 40 பேரை கைது செய்தனர்.
இளையான்குடியில்..: இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுகவினர் இளையான்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஒன்றியச் செயலாளர் மதியரசன், இளைஞரணி நிர்வாகி முருகானந்தம், ஒன்றிய நிர்வாகிகள் பெரியசாமி, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலின்போது திமுகவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மறியல் செய்து கொண்டிருந்தவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
சிங்கம்புணரியில்..: சிங்கம்புணரியில் ஒன்றியச் செயலாளர் பூமணி, நகரச் செயலாளர் யாகூப் தலைமையில் 29 திமுகவினர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.