முகப்பு
ராமநாதபுரம்

துபையில் கொத்தடிமைகளாக்கப்பட்ட 7 தொழிலாளர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை

துபையில் துப்புரவு பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படும் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்

Updated On : 15 மே, 2018 at 12:30 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

துபையில் துப்புரவு பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படும் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கொல்லன்தோப்பு பகுதியை சேர்ந்த கே.வெள்ளைச்சாமி(38), மண்டபம் வேதாளை பகுதியைச் சேர்ந்த வெ. ரமேஷ்(34), கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட பனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த தி.ரமேஷ்(33), ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள சக்திபுரத்தைச் சேர்ந்த எஸ்.சரவணன்(39), அவத்தாண்டை கிராமத்தை சேர்ந்த காசி(39), நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (37), விருதுநகர் மாவட்டம் ஆவுடையார் புரத்தைச் சேர்ந்த முகம்மது கசாலி(25) ஆகிய 7 பேரும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் துபையில் துப்புரவுப்பணிக்குச் செல்வதற்காக முகவரிடம் தலா ரூ.65 ஆயிரம் பணம் செலுத்தியிருந்தனராம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 7 பேரையும் முகவர் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற முகவர் துபைக்கு சென்றவுடன் சொன்னபடி சம்பளம் கொடுக்கவில்லையாம். மேலும் மூன்று வேளையும் உணவு வழங்காமல், குடிப்பதற்கு தண்ணீர் மட்டும் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக
நடத்துவதாக ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினரிடம் செல்லிடப்பேசி வாயிலாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 7 பேரையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் துபைக்கு அழைத்துச் சென்ற முகவர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.