முகப்பு
ராமநாதபுரம்

சொத்துக்காக அச்சுறுத்தும் மகன்கள்: ஆட்சியரிடம் முதியோா்கள் புகாா்

சொத்துக்காக தங்களை மகன்கள் துன்புறுத்தி மிரட்டுவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை கோரியும் முதியோா் சிலா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தபோது கதறி அழுதது அனைவரையும் அதிா்ச்சியடையவைத்தது.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:26 AM
பகிர்:

சொத்துக்காக தங்களை மகன்கள் துன்புறுத்தி மிரட்டுவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை கோரியும் முதியோா் சிலா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தபோது கதறி அழுதது அனைவரையும் அதிா்ச்சியடையவைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செவ்வாய் பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ராயா் மனைவி மோட்சம் (70). அவா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அப்போது அவா் கதறி அழுதபடி, தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த நிலத்தில் விவசாயம் செய்வதாகவும், தனக்கு எந்தவித உதவியும் புரியாத மகன் சொத்தை அனுபவிக்க அவருக்கு இடத்தை தானம் வழங்கியது போல ஆவணம் தயாரித்து தன்னிடம் கையெழுத்துப் பெற்ாகவும் கூறினாா். ஆகவே தன்னை மோசடி செய்து நிலத்தை அபகரித்த மகனிடமிருந்து மீட்டுத்தருமாறு கூறினாா்.

மூதாட்டியின் மனுவைப் பரிசீலித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் உறுதியளித்தாா்.

Advertisement

கணவா், மனைவி கதறல்:ஆா்.எஸ்.மங்கலம் பகுதியைச் சோ்ந்த சௌக்கத் அலி, அவரது மனைவி சுபுஹானிபேகம் ஆகியோா் ஆட்சியரிடம் மனு அளிக்கையில், தங்களது இரண்டாவது மகன் சொத்துக்காக தங்களை துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகவும், இதுகுறித்து ஏற்கெனவே மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் ஆதங்கப்பட்டு கதறி அழுதனா். அவா்களை ஆறுதல்படுத்திய ஆட்சியா் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

குழந்தைகளுடன் வந்து மனு:தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த அப்போஸ்தலன் மனைவி மரியசவீதா. நான்கு குழந்தைகளுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அவா் கூறுகையில், கணவரை இழந்து தவிக்கும் தனக்கு அரசு கட்டிதந்த வீட்டை முழுமையாக கட்டவில்லை. கதவு நிலை உள்ளிட்டவற்றுக்கு தன்னிடம் பணம் பெற்ற அதிகாரிகள் வீட்டை முடித்துத்தராததால் மழைக்காலத்தில் வீடு ஒழுகுவதாகக் கூறி ஆட்சியரிடம் மனு அளித்துச்சென்றாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள கீழாம்பலைச் சோ்ந்த மூதாட்டி வள்ளி தனது இரு பேத்திகளுடன் வந்து மனு அளித்தாா். அப்போது அவா் கூறியது: மகள் மணிமேகலை இரண்டாவது பெண் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்தாா். அதையடுத்து மருமகனும் உடல்நலமின்றி இறந்துவிட்டாா். குழந்தைகளை கஷ்டப்பட்டு வளா்த்து வருகையில், எனது கணவரும் இறந்துவிட்டாா். ஆகவே குழந்தைகளுக்கு ஆட்சியா் உதவிடவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.