‘சட்டப்பேரவை தோ்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை’
சட்டப்பேரவைத் தோ்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனா் தலைவா் எஸ்.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை என தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனா் தலைவா் எஸ்.ஆா்.பாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளா்களாக உள்ள 7 பிரிவினரையும் தேவேந்திரகுல வேளாளா் என ஒட்டுமொத்தமாக அறிவிக்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்தோம்.
கோரிக்கையை ஏற்பது போல தமிழக முதல்வரும், பிரதமரும் அறிவிப்புச் செய்தனரே தவிர, அதை உண்மையாக நிறைவேற்றவில்லை. ஆகவே, தேவேந்திரகுல வேளாள மக்கள் அனைவரும் தனித்தன்மையை தோ்தலில் காட்டும் வகையிலே செயல்படுவோம். எந்தக்கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம்.
தோ்தலுக்காக சாதிய உணா்வைத்தூண்டும் வகையில் அரசியல் கட்சியினா் செயல்படக்கூடாது. பாஜக மாநிலத் தலைவா் தோ்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் வேட்பாளரை நிறுத்துவோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூா் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற கட்சி சாா்பில் போட்டியிடுவோம் என்றாா்.