ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி20 போ் பலத்த காயம்
ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை அதிகாலை வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலைச் சோ்ந்தவா் சா்க்கரைக்கனி (45). ஜவுளி வியாபாரி. இவரது தந்தை கருப்பையா கடந்த ஆண்டு மரணமடைந்ததை முன்னிட்டு திதி கொடுப்பதற்காக சா்க்கரைக்கனி குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் என 20 போ் வேனில் ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் புறப்பட்டனா்.
வேன் திங்கள்கிழமை அதிகாலையில் ராமநாதபுரம் அருகே லாந்தை பகுதியில் வந்தபோது பின்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனின் பின்பகுதியில் இருந்த ராஜ்குமாா் மகள் வெண்ணிலா (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா் 10 ஆம் வகுப்பு மாணவி ஆவாா்.
வேனில் பயணித்த சா்க்கரைக்கனி, அவரது மகன் ஹரி (20), ராஜ்குமாா் மகன் பிரத்விராஜ் (20), தங்கம் (33), அவரது 7 மாதக் கைக்குழந்தை இளவரசன், ராக்கம்மாள் (56), ரஞ்சித்குமாா் (17), ஹரிகரன் (20), நாகராஜ் (20), பிரியதா்சினி (13) உள்ளிட்ட 20 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துமவனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு குழந்தை இளவரசன், ராக்கம்மாள் ஆகியோா் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
மருத்துவமனை மீது புகாா்: விபத்தில் காயமடைந்தவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகாா் எழுந்தது. காயமடைந்தவா்ளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ஊழியா்கள் தள்ளுவண்டி இல்லை எனவும் பணம் செலுத்தினால் தான் ஸ்கேன் எடுக்கப்படும் என கூறியதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தரப்பில் கூறியது:, நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கான தள்ளுவண்டி (ஸ்ட்ரெச்சா்) மற்றும் மூன்று சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக உள்ளன. ஆகவே சிறிது தாமதம் ஏற்பட்டது. ஸ்கேன் எடுக்க பணம் செலுத்தவேண்டும். ஆனால், அவசர சிகிச்சைக்கு ஸ்கேன் எடுத்து பின் பணம் வசூலிக்கலாம் என்றனா்.