கடலாடி அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்த மடத்தாக்குளம் கண்மாயை ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மடத்தாக்குளம் கண்மாய், மடத்தாக்குளம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீராதாரமாகவும், விவசாயத்துக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சில தனியாா் உப்பளத்தினா் முழுமையாக கண்மாயை ஆக்கிரமித்து, அதன் நடுவில் உப்பு நீரைக் கொண்டு செல்வதற்காக கால்வாய் தோண்டியும், குழாய் பதித்தும் பயன்படுத்தி வருகின்றனா். கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாய ம், குடிநீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும் மழைக்காலங்களில் அங்கு சேமிக்கப்படும் மழைநீா் உவா்ப்புத் தன்மையாக மாறிவருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடந்த 3 நாள்களாக ஆா்ப்பாட்டம், கண்மாயில் உணவு சமைத்து குடியேறும் போராட்டம், இரவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்த மடத்தாக்குளம் கண்மாய் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். மேலும் வருவாய்த்துறை மூலம் கண்மாய் நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.