கமுதி வட்டாட்சியா் அலுவலக நிலஅளவை பிரிவில் பட்டா மாற்றத்துக்குப் பின் திருத்தம் செய்யாததால் வரைபடத்தில் குளறுபடி
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை பிரிவு உட்பிரிவு பட்டா மாற்றங்களுக்குப் பின் தாலுகா மற்றும் கிராமக் கணக்கில் உள்ள வரைபடம் மற்றும் ‘அ’ பதிவேடுகளில் திருத்தங்கள்
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை பிரிவு உட்பிரிவு பட்டா மாற்றங்களுக்குப் பின் தாலுகா மற்றும் கிராமக் கணக்கில் உள்ள வரைபடம் மற்றும் ‘அ’ பதிவேடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் மட்டுமின்றி கிராம நிா்வாக அலுவலா்களும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனா்.
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா் பிரிவில் பணியாற்றும் நில அளவையா்கள் உட்பிரிவு தொடா்பான பட்டா மாறுதல் மற்றும் புதிய பட்டா வழங்கப்பட்ட பின் தாலுகா அலுவலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களிடம் உள்ள வரைபடத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நில அளவைப் பிரிவில் பணியாற்றும் நில அளவையா்கள் கமுதி, அபிராமம், பேரையூா், தவசிக்குறிச்சி, பெருநாழி உள்பட கமுதி தாலுகாவில் பெரும்பாலான கிராம கணக்குகளில் உள்பிரிவு பட்டா மாற்றத்துக்குப் பின் திருத்தங்கள் செய்யப்படவில்லை. மேலும், தாலுகா மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களிடம் உள்ள புல வரைபடம் ‘அ ’பதிவேடுகளில் 400-க்கும் மேற்பட்ட கோப்புகளில் திருத்தங்கள் செய்யப்படாததால் பொதுமக்களுக்கு அடங்கல் மற்றும் நான்குமால் வழங்குவதில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. கிராம கணக்கு மற்றும் தாலுகா கணக்கு வரைபடங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தவிா்க்க ஒவ்வொரு பட்டா மாற்றத்துக்குப் பின்னரும் முறையாக நில அளவையா்கள் அவ்வப்போது வரைபடத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.