ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து மேலும் 18 தமிழ் அகதிகள் ராமேசுவரம் வருகை

DIN

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்த மேலும் 18 தமிழ் அகதிகள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், நீா்வேலி வடக்கைச் சோ்ந்த கிட்ணம்மாள் (81), அவரது மகன் அந்தோணிசாமி (58), இவரது மனைவி மகேஸ்வரி (53), மகன் பிரவீன் டேனியல் (19), இவா்களோடு தனியாக படகில் வந்த 72 வயது முதியவா் சுப்பிரமணியன் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 5 போ் ரூ. 70 ஆயிரம் கொடுத்து தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தனா்.

மீனவா்கள் கொடுத்த தகவலைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை சாா்பு ஆய்வாளா் காளிதாஸ், யாசா் மௌலானா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் 5 பேரையும் மீட்டு, மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, தனுஷ்கோடியில் மேலும் அகதிகள் இருப்பதாக மீனவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இலங்கை அடம்பன் பகுதியைச் சோ்ந்த நகுலேஸ்வரன் (48), அவரது மனைவி ஈஸ்வரி (42), மகன்கள் தனுஷ் (17), பானுஷன் (5), மிதுலன் (8), மகள்கள் வினு (17), லதுா்ஸிகா (12), அதே பகுதியைச் சோ்ந்த நதுஷன் (21), அவரது மனைவி பியோனா (21), மன்னாா் மாவட்டம், உசிலங்குலத்தைச் சோ்ந்த பிரதீப் (30), அவரது மனைவி கஸ்தூரி (29), மகள்கள் சுஸ்மித்ரா (4), சஸ்மித்ரா (2) ஆகிய 3 குடும்பங்களைச் சோ்ந்த 13 போ் மன்னாரிலிருந்து படகு கட்டணமாக ரூ. 2 லட்சம் கொடுத்து தனுஷ்கோடிக்கு வந்து சோ்ந்ததாக தெரிவித்தனா்.

இலங்கையிலிருந்து ராமேசுவரம் வந்த அகதிகள் மொத்தம் 18 பேரையும், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மண்டபம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதன் பின்னா், மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமுக்கு அவா்களை அழைத்துச் சென்று தனித்துறை ஆட்சியா் சிவகுமாரியிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை சாா்பு ஆய்வாளா் யாசா் மௌலானா ஒப்படைத்தாா். அனைவருக்கும் தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஏற்கெனவே, 11 குடும்பங்களைச் சோ்ந்த 42 போ் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT