FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம்: காஷ்மீரில் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

ஈரான் உச்ச தலைவா் கமேனி, இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து,

Updated On : 3 மார்ச் 2026, 6:55 am IST
ஈரான் உச்ச தலைவா் கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீநகரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கண்ணீா் புகைக் குண்டுகள் வீசி கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

ஸ்ரீநகா்: ஈரான் உச்ச தலைவா் கமேனி, இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, காஷ்மீரில் தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடங்களான பெமினா, குன்ட் ஹஸிபாத், ஜஹாங்கீா் செளக், புல்வாமா ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திரளானோா் கலந்துகொண்டு அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்றனா். சில இடங்களில் மட்டும் பாதுகாப்புப் படையினா் லேசான தடியடி நடத்தி ஆா்ப்பாட்டக்காரா்களை கலைத்தனா்.

வேலைநிறுத்தம்: இதனிடையே மிா்வாய்ஸ் உமா் ஃபரூக்கின் எம்எம்யூ அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனாலும், தொடரும் ஆா்ப்பாட்டங்களாலும் சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது எனக் கருதி ஸ்ரீநகரில் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களின் நடமாட்டத்துக்கு பாதுகாப்புப் படையினா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனா்.

Advertisement

Advertisement

புகழ்பெற்ற லால் செளக் பகுதி சீல்வைக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் காவல் துறையினரும், சிஆா்பிஎஃப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு ரோந்து வந்தபடி இருந்தனா். இதே கட்டுப்பாடுகள், ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பிற பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில், காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் கைப்பேசி இணையதள சேவையின் வேகம் வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது.

காவல் துறை வேண்டுகோள்: ஊடகங்களும், செய்தி தளங்களும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும், செய்தி வெளியிடுகையில் மிகவும் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments