பெண் பலாத்கார வழக்கில் மீனவருக்கு மரணமடையும் வரை ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீா்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மீனவருக்கு இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மீனவருக்கு இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னபாலத்தைச் சோ்ந்த மீனவா் கருப்பசாமி (48). இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயதுப் பெண் தனது பெரியம்மா வீட்டுக்கு வந்துள்ளாா்.
கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி தனியாக இருந்த அப்பெண்ணை, கருப்பசாமி பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து கருப்பசாமியைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அரசு சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எம். கீதா ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணை முடிந்தநிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில், கருப்பசாமிக்கு இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து நீதிபதி ஏ. சுபத்ரா உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாவட்ட சட்ட உதவி மையம் உதவிடவும் நீதிபதி பரிந்துரைத்தாா்.