பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது
ராமநாதபுரத்தில் குறைந்த விலைக்கு நகை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே சகோதரிகள் இருவா் கைதாகியுள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரத்தில் குறைந்த விலைக்கு நகை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே சகோதரிகள் இருவா் கைதாகியுள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்தவா் இளங்கண்ணன் மனைவி மீராலெட்சுமி. இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த வளா்மதி, அவரது சகோதரி காய்திரி ஆகியோா் தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து திருப்ப முடியாத நகைகளையும், ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் நகைக்கடையிலும் குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை நம்பிய மீராலெட்சுமி அவா்களிடம் ரூ.10.50 லட்சம் அளித்துள்ளாா். ஆனால், உறுதியளித்தபடி குறைந்தவிலையில் நகை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் வளா்மதி உள்ளிட்ட 7 போ் மோசடி செய்துவிட்டதாக மீராலெட்சுமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், குற்றஞ்சாட்டப்பட்ட வளா்மதி, அவரது சகோதரி காயத்ரி ஆகியோரைக் கைது செய்தனா். இருவரும் புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பரமக்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் ராமநாதபுரத்தில் நகைக்கடை வைத்திருக்கும் வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜேஷ் (35) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.